Tuesday, March 31, 2009

ஆப்பிளும் விதைகளும்

ஆப்பிள் சுவையானது, உடலுக்கு ஆரோக்கியமானது எல்லாம் சரி ஒரு ஆப்பிளை வைத்து மனிதனையும் இறைவனையும் வேறு படுத்திக் காட்ட முடியுமா?

என்ன வெறும் ஒரு ஆப்பிளை வைத்து எப்படி இவ்வளவு பெரிய தத்துவத்தை விளக்க முடியும்?

முடியும், விளக்கினார் ஒரு மகான். சரி அதைத்தான் சட்டென்று கூறுங்களேன்.

பொறுமை, பொறுமை. கேட்டவுடன் கிடைக்கும் எதற்கும் அது எவ்வளவு அவசியமானதாக இருந்தாலும் அதன் மதிப்பு குறைவுதான்.

இறைவன் கூட தன் மதிப்பைக் குறைத்துக் கொள்ளக் கூடாது என்று தான் மனிதனின் பிரார்த்தனைகளை சிறிது காலம் தாழ்த்தி நிறைவேற்றுகிறானோ?

இறைவனின் மதிப்பை யாரும் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்று தெரியாதா?

தெரியும் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். சரி இப்போதாதாவது சொல்லக்கூடாதா?

சொல்கிறேன்.ஒரு ஆப்பிளில் எத்தனை விதை உள்ளது என்று எண்ணிச் சொல்ல மனிதனால் முடியுமா?

பூ இது என்ன பிரமாதம்? நானே சொல்லி விடுவேனே, மாதுளையா கொய்யாவா அவைகளைக் கூட சிறிது மெனக்கெட்டால் எண்ணி விடலாம்.

கேள்விக்கு பதில் இதுதான், மனிதனால் ஒரு ஆப்பிளில் எத்தனை விதைகள் என்று எண்ண முடியும், ஆனால் இறைவனால் மட்டுமே ஒரு விதையில் எத்தனை ஆப்பிள்கள் உள்ளதென்று கூற முடியும்.

ஆஹா, எவ்வளவு பெரிய உண்மை?

ஆமாம், இதில் இன்னும் பல ஆழமான தத்துவங்களும் உண்டு அவைகளைச் சொல்லித் தெரிவதை விட ஒவ்வொருவரும் உணர்ந்துதான் புரிந்து கொள்ள முடியும்.

Monday, March 30, 2009

மரணத்தின் வர்ணம்


(ஒரு முன் குறிப்பு - ஜேட் கூடி(Jade Goody)(5 ஜூன் 1981– 22 மார்ச் 2009) ஒரு ஆங்கில தொலைக்காட்சி பிரபலம். 2007ல் celebrity Big brother என்ற லண்டன் தொலைக் காட்சியின் உண்மை நிகழ்வுக் காட்சி (reality show)வில் இந்திய திரைப் பட நடிகை சில்பா க்ஷெட்டி உட்பட பல ஆங்கில பெண்களுடன் ஒரே கண்ணாடி அறையில் சில நாட்கள் உலகம் உற்று நோக்க வாழும் நிகழ்ச்சியில் நிற வெறி கொண்டு சில்பாவிடம் மோசமாக நடந்ததை கண்டு உலகமே கண்டித்தது. ஆனால் அவரே தன் தவறை உணர்ந்து இந்தியா வந்து மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் வாழ்க்கையில் விதி விளையாடியது. திடீரென்று தாக்கிய புற்று நோய் காரணமாக இறந்தார்)


மரணத்தின் வர்ணம்


ஆருயிர்த் தோழியே
நான்தான் சில்பா

அன்று நடந்ததை
அன்றே மறந்தேன்

இன்னொரு சந்தேகம்
இன்று எனக்கு

மரணத்தின் நிறம்
கறுப்பா வெள்ளையா

உன்னைக் கேட்டால்
உண்மை தெரியும்

கனவில் வந்து சொல்வாயா
கண்ணே ஜேட் கூடி ?

பாழ் துளைக் கிணறு

இயந்திரங்களால் முடியாமல்
வடித்த எங்கள்
கண்ணீரால்
துளை நிரம்பி
மிதந்து நீ மேலே
வந்தாயோ தம்பி?

ஆழப் புதைந்த உன்னை
அகழ்ந்து எடுத்தது
சற்றே
மேலே புதைக்கவா
செல்வமே?


(செய்தி 24/02/2009) : ஆண்டிப்பட்டியில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, பல இயந்திரங்கள் கொண்டு 2 நாட்கள் முயன்று இறுதியில் இறந்த நிலையில் உடலை மீட்டனர்)