ஒரு முன் குறிப்பு : - இது ஒரு காட்டின் கதை, வேட்டைக் கதை. இதில் வேறு வகையான கற்பனைகளை நீங்கள் செய்து கொண்டால் அது எந்த விதத்திலும் எழுதியவரைக் கட்டுப் படுத்தாது.
இனி கதை :- இந்தியக் காடுகளை வேட்டை வசதிக்காக விலங்குகள் 543 பெரும் பரப்புக்களாகவும், பற்பல சிறு பரப்புக்களாகவும் பிரித்துள்ளன. பெரும் பரப்புக்களில் தென் கோடியில் தமிழ்க் காடு எனப்படும் 40 ஏக்கரை மட்டும் இங்கு காண்போம்.
தமிழ்க்காட்டில் 39 ஏக்கரும் பாண்டிக் காடு ஒரு ஏக்கருமாக மொத்தப் பரப்பு 40 ஏக்கர். இங்கு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வேட்டை சீசன் வரும். அப்போது விலங்குகள் தமக்குள் கூட்டு சேர்ந்து கொண்டு வேட்டையாடுவது வழக்கம். அந்தந்த சீசனுக்கேற்றார் போல் தமக்குள் அணி மாறிக்கொள்வதும் உண்டு. தற்போது வந்திருக்கும் சீசனில் அவைகள் அமைத்துள்ள அணி வியூகங்கள் பற்றி இங்கே காண இருக்கிறோம்.
தமிழ்க்காட்டில் ஒரு கிழட்டுச் சிங்கமும் ஓர் ஓநாயும் தமக்குக் கீழ் சில விலங்குகளை சேர்த்துக் கொண்டு இரு பிரிவுகளாகப் பிரிந்து வேட்டையாடுவது வழக்கம். இந்த சீசனில் கிழச் சிங்கத்துடன் சென்ற சீசனில் இருந்த பெண் சிங்கம் உள்ளது. ஆனால் சென்ற முறையிருந்த ஒரு மலைப் பாம்பும், இரு செந்நாய்களும் இப்போது ஓநாயுடன் சென்று விட்டன. மலைப் பாம்புடன் எப்போதுமிருக்கும் சிறுத்தை மட்டும் விடுபட்டு, விடுபட்ட சிறுத்தையாக சிங்கத்துடன் வந்து விட்டது. வழக்கமாக உள்ள ஒரு குள்ள நரியும் இங்குள்ளது. இது எப்போதும் சிங்கத்தின் வேடத்தில்தான் சென்று வேட்டையாடும்.
அடுத்தது ஓநாய் அணி. இங்கே தற்போது வந்து சேர்ந்த மலைப் பாம்பு, இரு செந்நாய்களுடன் சென்ற வேட்டைக் காலத்திலிருந்து உடன் இருக்கும் ஒரு கழுதைப் புலியும் உண்டு. இந்த கழுதைப் புலி ஒரு காலத்தில் ஓநாயால் ஓட ஓட விரட்டப்பட்டதுதான். ஆனால் சென்ற சீசனில் கிழச் சிங்கத்துடன் ஏற்பட்ட சிறிய பேர பேதத்தால், வெட்கங்கெட்டு விரட்டிய ஓநாயிடமே வந்து சரணடைந்து விட்டது.
இவை தவிர மதம் பிடித்த வெறி நாய் ஒன்றும் உள்ளது. இந்தியக் காடுகளில் மற்ற இடங்களில் இதற்கு ஓரளவு திறன் இருந்தாலும் தமிழ்க் காட்டில் துளியும் வேட்டைத் திறன் கிடையாது. ஒரு காலத்தில் கிழச் சிங்கம் ஒரு முறையும் ஓநாய் ஒரு முறையும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து சில தேர்ந்த வேட்டைப் பலன்களை அடைந்தன. ஆனால் தற்போது அதன் வெறி காரணமாகவும் தமிழ்க் காட்டில் அதற்கு வேட்டையாடும் திறனின்மை காரணமாகவும் யாரும் அதனைச் சட்டை செய்வதில்லை.
இது போக கண் சிவந்த கடுவன் பூனை ஒன்றும் தமிழ்க் காட்டில் சில காலமாக வளர்ந்து வருகிறது. இது யாருடனும் அணி சேராமல் தனியாகவே வேட்டையாடும். தனி வேட்டைத்திறன் இல்லாவிடினும் ஓநாயின் இரையை இது விரட்டி விடுவதால் அது சிங்கங்களுக்கு ஆக்கமாக உள்ளதாகக் கூறுவார்கள். இதற்காகவே தற்போது சிங்கங்களிடம் வெகுமதி பெற்றுக் கொண்டு தனி வேட்டை என்று அறிவித்ததாகக் கூட ஒரு பேச்சு உண்டு.
இன்னும் ஒரு சில உதிரி நாய்களும் காட்டில் உண்டு. தங்களுக்கும் வேட்டைப் பரப்பில் பங்கு வேண்டும், இல்லாவிடில் தனியாக வேட்டையாடி இரைகளைச் சிதறடிப்போம் என்று கூறிக் கொள்ளும். ஆனால் கிழச் சிங்கமோ, ஓநாயோ புதைத்து வைத்திருக்கும் எலும்புத் துண்டுகளில் சிலவற்றை எடுத்து வீசினால் பெற்றுக் கொண்டு அவைகளுடன் ஐக்கியமாகி விடும்.
சரி இனி வேட்டைக் காட்டை அவை தமக்குள் பிரித்துக் கொண்ட கதையைப் பார்ப்போம். கிழச்சிங்கம் தனக்கு 21 ஏக்கர் எடுத்துக் கொண்டு, பெண் சிங்கத்திற்கு 16 ஏக்கரும், விடுபட்ட சிறுத்தைக்கு 2 ஏக்கரும், குள்ள நரிக்கு 1 ஏக்கரும் பிரித்துக் கொடுத்தது. கழுதைப் புலி சென்ற பின் இங்கே அதிகம் பேரங்கள் இல்லை. கிடைத்ததை யாவும் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டன.
ஓநாய் அணியில்தான் பாகப் பிரிவினையில் பெரிய களேபரமே நடந்தது. அது மலைப் பாம்புக்கு 7 ஏக்கரும் அத்துடன் தனக்கு பாத்தியதைப் பட்டு வர இருக்கும் சொந்த பட்டாக் காடு ஒரு ஏக்கரும் (மலைப் பாம்புக் குட்டிக்காக), செந்நாய்கள் இரண்டிற்கும் தலா 3 ஏக்கரும் கழுதைப் புலிக்கு 3 ஏக்கரும் முதலில் ஒதுக்கியது. கழுதைப் புலி இதை ஏற்கவில்லை. இப்போது வந்து சேர்ந்த செந்நாய்களுக்கும் மலைப் பாம்புக்கும் அதிகப் பரப்புக் கொடுத்து விட்டு முன்பிருந்தே இங்கிருக்கும் தனக்கு குறைவாக ஒதுக்குவதை ஏற்க இயலாது என்றும் தனக்கு 8 ஏக்கர் வேட்டைக் காடு வேண்டும் என்றும் திருப்பிய ஊர்க்காடு அதில் சேர வேண்டும் என்றும் கூறியது. ஆனால் ஓநாயோ 3 ஏக்கர்தான் தர முடியும் என்று கூறியது. தொடர்ந்து பல முறை பேசி கழுதைப் புலி 7,6,5 என்று இறங்கி வந்து இறுதியில் 4 ஏக்கர் என்று முடிவானது. ஆனால் திருப்பிய ஊர்க் காட்டை மட்டும் தர முடியாதென்று ஓநாய் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. இது போக மீதியுள்ள 23 ஏக்கர் வேட்டைக் காடுகளையும் ஓநாய் தனக்கு எடுத்துக் கொண்டது.
இவை அனைத்தும் வேட்டை சீசனுக்கான முஸ்தீபுகள் தாம். வேட்டையை முறைப்படுத்தவும், ஒழுங்கீனங்களைக் கண்டிக்கவும் ஒரு பெரிய காட்டு யானையும் அதன் கீழ் இரண்டு துணை யானைகளும் உண்டு. அவை அவ்வப்போது சிறுது பிளிறும் அவ்வளவுதான். யாரும் அவைகளை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.
இனி சீசன் துவங்கியவுடன் தான் தெரியும், வேட்டைக்காக விலங்குகள் எப்படி காடு காடாகச் சுற்றுகின்றன, தம் இரைகளுக்கு என்னென்ன வலை விரிக்கின்றன என்பதெல்லாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
வேட்டையாடு விளையாடு என்ற தலைப்பை உலக நாயகன் கமலஹாசன் நடித்து வெளி வந்த படத்திலிருந்து எடுக்கவில்லை, அதற்கே மூலமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த “அரச கட்டளை” படத்தில் வரும் கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடல்தான் வேட்டையாடு விளையாடு. இதன் அடுத்த வரியும் இந்த விலங்குகளின் கூட்டு வேட்டைக்கு மிகப் பொருத்தமாயிருக்கும். அது, வேட்டையாடு விளையாடு - விருப்பம் போல உறவாடு.
Tuesday, April 28, 2009
Monday, April 27, 2009
மலர்ச்சி
மலர்ச்சி
வாழ்வில்
மலர்ச்சி வேண்டி
இரவெல்லாம்
கை கூப்பி
பிரார்த்தித்தது
தாமரை மொக்கு
விடிந்ததும்
பலித்தது
பிரார்த்தனை
Thursday, April 16, 2009
இல்லாததில் இணைவது
மூக்கிற்கு முன்னாலும்
பிடரிக்குப் பின்னாலும்
உச்சிக்கு மேலும்
உடலைச் சுற்றியும்
அனைத்துமே ஆகாயம்
காலடியில் மட்டும்
ஆகாயத் தீவு
தீவிலே உயிர்கள்
நிற்பதோர் திட்டு
ஒவ்வொருவர்
காலடியிலும்
ஒரு மணல் திட்டு
கால வெள்ளத்தில்
கரையும் திட்டு
திட்டு கரைந்தால்
தீவிலே காயம்
ஜீவன் சேர்வதோ
எல்லையறு ஆகாயம்
இல்லாமல் இருப்பதே
ஆகாய சக்தி
இல்லாததில் இணைவதே
உயிர்களின் முக்தி
Wednesday, April 15, 2009
முத்துக் குமார்
உன் ஜீவ சிதையின்
வெளிச்சத்தில் கூட
ஈழத் தமிழர்களின்
கதறல்களைக்
கண்டும் காணாதவர்கள்
எங்களவர்கள் அல்ல
இனி அவர்கள்
சிங்களவர்கள்