Wednesday, May 27, 2009
அறிவுள்ள அடக்கம்
ஓர் அழகான ஆற்றங்கரை. அங்கு ஓர் அமைதியான ஆசிரமம். ஒரு பழுத்த ஆன்மிக ஞானி அதன் தலைவர். அவருக்கு நூற்றுக் கணக்கான சீடர்கள். ஒரு நாள் தன் அந்திம காலத்தை உணர்ந்த குரு, சீடர்களை அழைத்து, “நாளை விடியலில் ஒரு மிக முக்கியமான உபதேசம் இருக்கிறது, அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
அதன்படியே அடுத்த நாள் வைகறையில் அனைவரும் ஆவலோடு வந்து அம்ர்ந்திருந்தனர். குருவும் இதுவரை கூறாத புதிய உபதேசங்களையும், பல பயன் மிகு செய்திகளையும் கூறி விட்டு இதைக் கேட்ட உங்களுக்கு மிகுந்த நன்மை கிடைப்பதுடன் உங்கள் பாவங்கள் அனைத்தும் நன்மையாக மாறி விடும் என்று ஆசீர்வதித்து யாராகிலும் வேறு ஏதாவது கூற நினைத்தால் கூறலாம் என்றார்.
பலரும் எழுந்து குருவைப் புகழ்ந்து பேசினர். ஒரே ஒருவர் மட்டும், “இந்த உபதேசத்தால் அதிக நன்மையடைந்தது நான்தான்” என்றார். இதைக் கேட்ட மற்றவர்கள் மிகுந்த சினம் கொண்டனர். என்ன அகம் பாவம், தலைக்கனம். குருவிடமே தற்பெருமை பேசுகிறாரே என்று எண்ணினர். ஆனால் குருவோ, ”நீர் தான் இனி இந்த ஆசிரமத்தின் தலைவர், இவர்களுக்கு புதிய குரு” என்று கூறிவிட்டு உயிர் நீத்தார். அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஞானியின் இறுதிக் கடன்களை முடித்து விட்டு, புதிய குருவின் முதல் உபதேசக் கூட்டத்தில் அவர்களின் முதல் கேள்வியே இது பற்றித்தான் இருந்தது.
புதிய குரு அமைதியாக தான் பேசியது தற்பெருமையல்ல என்று கூறி விளக்கம் அளித்தார். நமது குரு என்ன சொன்னார் ? இந்த உபதேசத்தைக் கேட்டவர்களுடைய பாவங்கள் எல்லாம் நன்மைகளாக மாறிவிடும் என்று கூறினார் அல்லவா?
என்னைப் பொறுத்தவரையில் இங்கே அதிகம் பாவம் செய்ததவன் நான் தான் என்று நினைத்தேன். எனவே என் அனைத்துப் பாவங்களும் நன்மையாக மாறும்போது இங்கே
அதிகம் நன்மையடைந்தது நானாகத்தானே இருக்க முடியும்? எனவேதான் அவ்வாறு கூறினேன் என்றார். உடனே அனைவரும் எழுந்து நின்று உங்களை குருவாக அடைந்தது எங்கள் பாக்கியம் என்று கூறி வணங்கினர்.
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment